நாகையில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த 2 பேரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

நாகையில் கைது செய்யப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த இருவரையும், வருகிற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை மண்ணடியில் உள்ள லிங்கி செட்டி தெருவில், தடை செய்யப்பட்ட சிமி அமைப்போடு தொடர்புடைய அசருல்லா என்ற அமைப்பின் கிளைகள் செயல்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, கடந்த 9ஆம் தேதி என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அசன் அலி, முகமது யூசுப்புதீன் ஆகிய இருவரையும் நாகையில் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர் நான்கு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 9 செல்போன்கள், 15 சிம்கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, நாகப்பட்டினத்தை சேர்ந்த இருவரையும் பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்து வந்தனர்.

எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டியன் வீட்டில், அவர்கள் இருவரையும் ஆஜர் படுத்தினர். இதையடுத்து கைதான இரண்டு பேரையும் வருகிற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version