ரூ.500 முதலீடு தினமும் ரூ.36 லாபம் – பண மோசடி செய்த இருவர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோரிடம், ஆன்லைன் வர்த்தகம் மூலம் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். வாடகைக் கார் ஓட்டுநரான இவருடைய உறவினர் மூலம், ஹைதராபாத்தை சேர்ந்த Ace Best என்ற நிறுவனத்தின் எம்.எல்.எம் வர்த்தகம் குறித்து தெரியவந்துள்ளது. அந்த வர்த்தகத்தில் நல்ல வருமானம் வரும் என்றும், 500 ரூபாய் டெபாசிட் செய்தால் நாளொன்றுக்கு 36 ரூபாய் வருமானம் வரும் என்று உறவினர் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பிய முருகேசன், தன்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்து, 36 ஆயிரம் ரூபாய் தொகையை அந்த நிறுவனத்தின் குமாரபாளையம் பகுதி பிரதிநிதிகளான கதிரவன் மற்றும் மதன்குமார் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். இதேபோல், ஓலப்பாளையம், சடையம்பாளையம், பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், 500 ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளனர்.

இந்த டெபாசிட் தொகையை பெற்றுகொண்ட கதிரவன் மற்றும் மதன்குமார், ஹைதராபாத்தில் இருக்கும் ACE BEST என்ற நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இருபது நாட்கள் நடைபெற்ற இந்த ஆன்லைன் வர்த்தகத்தில், ஒரு சிலருக்கு மட்டும் கமிஷன் தொகைகள் தரப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த 31ஆம் தேதி, இந்த நிறுவனம் மூடப்பட்டு விட்டதாக வந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்த டெபாசிட்தாரர்கள், மதன்குமார் மற்றும் கதிரவனிடம், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அதற்கு இருவரும் தகாத வார்த்தைகளால், வசைபாடி, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

ஏமாற்றமடைந்த முருகேசன் உட்பட ஏராளமானோர், கதிரவன் மற்றும் மதன்குமார் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்து, முற்றுகையிட்டனர். போலீசார் புகார் கொடுத்தவர்களை சமாதானப்படுத்தி, கதிரவனையும், மதன்குமாரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கார், ஏழு ஏடிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version