திடீரென சுவை மற்றும் வாசனையை உணர முடியாததும், கொரோனா வைரசின் அறிகுறிகள்தான் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான அறிகுறிகளில் கூடுதலாக இரண்டு அறிகுறிகளை மத்திய சுகாதார அமைச்சகம் சேர்த்துள்ளது. காய்ச்சல், இருமல், உடல் சோர்வு ஆகியவை கொரோனா வைரஸின் அறிகுறிகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், மூச்சுத்திணறல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு கூடுதலாக இரண்டு அறிகுறிகள் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அனாஸ்மியா எனப்படும் நறுமணத்தை உணர முடியாததும், ஏஜூசியா எனப்படும் சுவையை உணர முடியாததும் புதிய அறிகுறிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வயிற்றுப் போக்கு, பசியின்மை, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.