இந்தியாவுக்கு ஆதரவாக ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் இயங்குவதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன. காரணம் என்ன? – விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, பாகிஸ்தானின் சமூக ஊடகங்கள் இந்தியாவை கடுமையாக விமர்சித்தன. இந்தியாவுக்கு எதிரான கருத்துகளும், ஹாஷ்டாக்குகளும் பாகிஸ்தானில் இருந்து டிரெண்ட் செய்யப்பட்டன. சமூக வலைத்தளமான ட்விட்டர், கடந்த வாரத்தில் இந்தியாவுக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீர் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்த 200 பேரின் கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
ட்விட்டரின் கொள்கைகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் கணக்குகளை டுவிட்டர் முடக்குவது வழக்கம். அதன் அடிப்படையிலேயே இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதுபோல, ஃபேஸ்புக் நிறுவனமும் பல கணக்குகளை முடக்கியது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அரசு, கணக்குகள் முடக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்க இரண்டு நிறுவனங்களிடமும் கோரிக்கை வைத்துள்ளது.
பாகிஸ்தானின் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் ஆஷிப் கபூர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் காஷ்மீர் குறித்து கருத்து தெரிவித்ததற்காக, ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை முடக்கியது குறித்து அந்தந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்தான், பாகிஸ்தானின் ஊடகங்கள் ‘டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகியவை இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுகின்றனவா?’ – என்று கேள்வி எழுப்பி உள்ளன. ஆனால், பாகிஸ்தானிற்கு வெளியே உள்ள ஊடகங்கள் எதுவும், சமூக வலைத்தளங்களின் இந்த நடவடிக்கையை விமர்சிக்கவில்லை.
சமீபத்தில்தான், ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்ட சீன அரசுசார் கணக்குகளை, ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் முடக்கின. இப்போது, பாகிஸ்தானின் கணக்குகளையும் அவை முடக்கியது, சர்வதேச அரங்கில் சமூக வலைத்தளங்கள் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாக, சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.