சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில்நிலையத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்ட நிகழ்வில், டிக்கெட் பணியாளரே நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர், திட்டம் திட்டி மனைவியுடன் சேர்ந்து கொள்ளை நாடகம் அரங்கேற்றி சிக்கிக் கொண்டதை சொல்கிறது இந்தத் தொகுப்பு.
திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய பயணிகள் முன்பதிவு மையத்தில், டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த டீக்காராம் மீனாவை, 3ஆம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் அலுவலக நாற்காலியில் கட்டிப் போட்டு சென்றதாக கிடைத்த தகவலில் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினர் அங்கு சென்று அவரை மீட்டு விசாரித்தனர்.
அப்போது அதிகாலை 4.30 மணிக்கு டிக்கெட் எடுப்பது போல் வந்த மூன்று பேர், துப்பாக்கி காட்டி மிரட்டி, நாற்காலியில் கட்டிப்போட்டுவிட்டு, கவுண்டரில் இருந்த ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாயையும், தனது செல்போனையும் கொள்ளையடித்து சென்றதாக கூறியுள்ளார்.
இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், டீக்காராமையும் சந்தேக வளையத்திற்குள் வைத்திருந்தனர்.
தனிப்படை போலீசார் டைடல் பார்க் பகுதியில் உள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்தபோது, அதிகாலை 4 மணி அளவில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்தபடி வந்த பெண் ஒருவர் ரயில் நிலையத்திற்குள் சென்று திரும்பிய காட்சிகள் பதிவாகியிருந்தது. விசாரணையில் அந்தப் பெண், டீக்காராம் மீனாவின் மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்தது.
இதையடுத்து கிடுக்கிப் பிடி விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு டீக்காராம் தனது மனைவி சரஸ்வதி துணையோடு திட்டமிட்டு கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட டீக்காராம் மீனா, பலரிடமும் லட்சக் கணக்கில் பணம் கடன் வாங்கி விளையாடி சூதாட்டத்தில் இழந்துள்ளார்.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, மனைவி சரஸ்வதியுடன் இணைந்து கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இதற்காக ரயில் நிலையத்திற்குள் சிசிடிவி காமிரா இல்லாததையும் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்.
இரவுப் பணியில் இருந்த டீக்காராம் மீனாவின் திட்டப்படி, அதிகாலையில் அங்கு வந்த சரஸ்வதி கணவர் தந்த பணத்தையும், செல்போனையும் வாங்கிக் கொண்டு அவரையும், கட்டிப்போட்டுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
விசாரணையில் விவரங்கள் தெரிய வந்த நிலையில், போலீசார் கணவன், மனைவியை கைது செய்ததோடு, வீட்டில் பதுக்கி வைத்திருந்த பணத்தையும், டீக்காரமின் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் வேறு ஏதேனும் சம்பவங்களில் டீக்காராம் ஈடுபட்டாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.