தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரித்து மருத்துவர்கள் சாதனை

தலை ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளின் மூளையையும், மண்டை ஓட்டையையும் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை செய்துள்ளது நவீன மருத்துவம். அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

கடந்த 2017ஆம் ஆண்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த சைனாப் என்ற பெண்மணிக்கு, தலைகள் ஒட்டிய நிலையில் சாஃபா, மார்வா என்ற இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தனர். இரட்டையர்கள் ஒட்டிப் பிறப்பது 25 லட்சம் பிரசவங்களுக்கு ஒருமுறை நடக்கும் அரிய நிகழ்வு. இதில் தலைப்பகுதியில் ஒட்டியபடி பிறப்பது, அவர்களிலும் வெறும் 5% பேருக்கு மட்டுமே நடப்பது. இதனை மருத்துவ உலகில் கிரானியோபாகஸ் என்று அழைக்கிறார்கள்.

ஒட்டிப் பிறக்கும் கிரானியோபாகஸ் இரட்டையர்கள், மண்டையோட்டையும், மூளையையும், ரத்த நாளங்களையும் பகிர்ந்து கொள்வதால் இவர்களைப் பிரிப்பது மிகக் கடினமானது. இதற்காகப் பல சிறிய அறுவை சிகிச்சைகள் பல கட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதனால் இரட்டையர்களைப் பிரிப்பதில் உலகப் புகழ்பெற்ற லண்டனின் கோஷ் மருத்துவமனையை இந்த இரட்டையர்களின் தாயார் சைனாப் அணுகி இருக்கிறார். அதற்கு மருத்துவமனை தயாராக இருந்தும், செலவுக்கான பணம் கிடைக்கவில்லை. இதனால் ஒரு வயதிற்குள் மேற்கொள்ள வேண்டிய அறுவை சிகிச்சை 19 மாதங்கள் வரை தள்ளிப்போய் இருக்கிறது.

இதனைக் கேள்விப்பட்ட ஒரு தொழிலதிபரின் உதவியால், 2018ல் கிரானியோபாகஸ் இரட்டையர்கள் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களால் 4 கட்டங்களில் மொத்தம் 55 மணி நேரங்கள் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு இந்த இரட்டையர்கள் பிரிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்காக இருவரின் மூளை மற்றும் மண்டை ஓட்டு அமைப்பை ‘3டி’ தொழில்நுட்பத்தில் மாதிரி எடுத்து, மருத்துவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டனர். முதலில் பிளாஸ்டிக் துண்டை வைத்து மூளையைப் பிரித்து, ரத்த நாளங்களை வெட்டி, ஒட்டி ஒரு மூளையை மருத்துவர்கள் இரண்டாக்கினர். பின்னர் மண்டை ஓடுகளை வெட்டிப் பிரித்து, குழந்தைகளின் சொந்த எலும்பாலும் தசையாலும் அவற்றை மூடினர். இப்படியாக இரட்டையர்கள் பிரிக்கப்பட்டனர். இந்த சிகிச்சையில் முக்கிய ரத்த நாளத்தை மார்வாவுக்கு அளித்த போது சாஃபாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டது, அதுவும் மருத்துவர்களால் குணப்படுத்தப்பட்டது.

மிகக் கடினமான 4 அறுவை சிகிச்சைகளின் முடிவில் இப்போது ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கடந்த 1ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இரண்டு கிரானியோபாகஸ் இரட்டையர்களைப் பிரித்த கோஷ் மருத்துவமனை, மூன்றாம் முறையும் மிகக் கடுமையாகப் போராடி வெற்றி பெற்றுள்ளது. மூளையைப் பகிர்ந்து கொடுத்த இந்த அறுவை சிகிச்சை நவீன மருத்துவ உலகின் சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

 

Exit mobile version