தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது.
அந்த வன்முறையை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், போராட்டத்தின் போது உட்புகுந்த சமூக விரோதிகள் யார் என்பது தனக்கு தெரியும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் அவருக்கு தெரிந்த விவரங்களை தெரிவிக்குமாறும், இது தொடர்பாக வரும் 25ஆம் தேதி தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆஜராகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சீமான் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அளிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.