நேற்று அதிகாலை துருக்கியின் தென்பகுதியில் மிகவும் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் பக்கவிளைவு சிரியாவின் வடக்குப் பகுதிவரைத் தொடர்ந்தது. இதனால் இரு நாட்டிலுமே ஏராளமான மனித இழப்புகள் மற்றும் கட்டிடங்கள்,வீடுகள் சரிந்து விழுந்துள்ளன. துருக்குயில் மட்டும் 2300 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிரியாவில் 1,444 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் இறப்பு எண்ணிக்கை 10,000த்தை தாண்டும் வாய்ப்பு உண்டு என்று துருக்கி நாட்டின் செய்திதொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ரிக்டர் அளவுமானியில் இந்த நில நடுக்கத்தின் அளவு 7.8 என்றும் பின் நேற்று மதியம் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கத்தின் அளவு 7.5 ரிக்டர் அளவு என்றும் கூறப்படுகிறது. இதனால் துருக்கி நாடே ஸ்தம்பித்து போயிருக்கிறது.
துருக்கியின் தெற்கு மாகாணம் ஹடேயில் உள்ள ஒரு பெண்மணியின் குரல் கேட்டுள்ளது. அவர் இடிபாடுகளில் சிக்கி உதவுங்கள் என்று கத்தியுள்ளார். அவர் அருகே அவரின் இறந்த குழந்தையும் இருந்துள்ளது. இது போன்று பலரின் குரல்கள் இடிபாடுகளில் இருந்து கேட்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள் என்று தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து மக்களின் குரல் மீட்புப் படையினரின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று ஒரு மீட்பு வீரர் கூறினார். மேலும் துருக்கியிலும் சிரியாவிலும் இது பனிக்காலம். மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக வயதானவர்களின் நிலை மிகவும் பரிதாபம்.
இந்த நிலநடுக்கத்தை ஆராய்ந்த அமெரிக்க சூழலியல் நிறுவனம் ஒன்று, தென் அட்லாண்டிக்கில் ஆகஸ்ட் 2021ல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பிறகு உலகம் எதிர்கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுதான் என்று தனது ஆய்வின் தரப்பினை சமர்பித்துள்ளது.
சிரியாவில் 1,444 நபர்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் ஏற்பட்ட இரு நாடுகளின் பகுதிகளிலும் இணையத்தின் சேவை முடங்கியுள்ளது.
நிலநடுக்கத்தினைப் பற்றி துருக்கி அதிபர் எர்டோகன் பேசும் போது. இது எங்கள் நாட்டிற்கு ஒரு வரலாற்று பேரழிவு என்று குறிப்பிட்டார். ஒவ்வொருவரும் தங்களின் இதயத்தினையும் ஆன்மாவையும் திடப்படுத்திக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்ட அவர், 45 நாடுகள் தங்களின் பாதுகாப்பு அணியினரை துருக்கி அனுப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
11வருட உள்நாட்டுப் போரில் பல இழப்புகளை ஏற்கனவே சந்தித்த சிரியாவிற்கு இந்த நிலநடுக்கம் மேற்கொண்டு பெரும் துயரத்தினையே அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய சபையின் மனிதநேய கழகம் எரிபொருள் குறைவாக உள்ள பகுதிகளுக்கு குறிப்பாக பனிவிழும் பகுதிகளுக்கு உலக நாடுகள் எரிபொருளினை வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது.