காமெடி பாதி, வில்லத்தனம் பாதி கலந்து செய்த டி.எஸ்.பாலையா…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் டி.எஸ். பாலையாவின் 107வது பிறந்த தினம் இன்று. திரையுலகில் மகத்தான கலைஞனாக பயணித்த பாலையாவின் சிறப்புகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

 

1914ம் ஆண்டு நெல்லைச் சீமையின் சுண்டங்கோட்டையில் பிறந்த பாலையா, நாடகங்களில் தடம்பதித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடன் ‘சதிலீலாவதி’ படத்தில் வில்லனாக அறிமுகமானார்.

ஆர்ப்பாட்டம் இல்லாத அசுர பாய்ச்சல் கொண்ட நடிப்பால், அடுத்தடுத்து தன்னை மெருகேற்றிக் கொண்டே சென்றார்.

பாலையா தனித்துவமாக நடிக்கிறாரா அல்லது, அவரது பாத்திரங்கள் தனித்துவமாக வடிவமைக்கப்படுகின்றனவா என யாராலும் உறுதியாக கூறிவிட முடியாது. ஏனெனில் அவர் தனது பாத்திரங்களால் நிகழ்த்திய மாயாஜாலங்கள் அப்படியானது.

காமெடியும் வில்லத்தனமும் கலந்த பாத்திரங்கள் சினிமாவுக்கே புதிதாக இருந்த காலக்கட்டத்தில், முதன்முதலாக அந்த பாணியில் ரசிகர்களை அசரடித்தவர் இவரே.

வில்லத்தனத்திற்கு ஒரு பார்வையையும், குணச்சித்திரம் என்றால் அதற்கென தனி கருணையையும் கண்களில் படரவிடும் பாலையா, நகைச்சுவை என்று வரும்போது விழிகளை அங்குமிங்கும் அழிச்சாட்டியம் செய்து ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்துவிடுவார்.

அவருக்கு ஈடாக விழிகளால் தனி ஆவர்த்தனம் செய்த திரை கலைஞர்கள் குறைவு என்றே சொல்லலாம்!.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருருடன் மதுரை வீரன், ஜெமினியுடன் மாமன் மகள், சிவாஜியுடன் தில்லானா மோகனாம்பாள், இயக்குநர் ஸ்ரீதருடன் காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, இவைகள் தவிர பாகப்பிரிவினை, களத்தூர் கண்ணம்மா போன்ற படங்கள், பாலையா என்ற அற்புத கலைஞனை காலம் கடந்தும் ஏன் கொண்டாட வேண்டும் என்பதற்கான விடைகளாக உள்ளன.

மிகச் சாதாரண மனிதர்களுக்கே மாற்று இல்லாத இவ்வுலகில், மகத்தான கலைஞன் பாலையாவின் வெற்றிடத்தை இங்கு யார்தான் நிரப்பிட முடியும்?.

தனது மாயப் பார்வையால் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிழலாடும் பாலையாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி நெகிழ்கிறது நியூஸ் ஜெ.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக அப்துல் ரகுமான்…

Exit mobile version