இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு, இன்னும் ஒரு வருடத்தில் இருந்து ஒன்றரை வருடங்கள் ஆகும் என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அளவில் தற்போது 5 கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஆய்வு நிலையில் உள்ளன. இவற்றில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சை-கோவ் -டி தடுப்பூசி ஆகியவற்றை, ஆரம்ப கட்ட மனித சோதனைகளுக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்நிறுவனங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய, மத்திய உயிரி தொழில்நுட்பவியல் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில், காசநோய்க்கு பயன்படுத்தப்படும் பிசிஜி தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி, கொரோனா வைரஸை எந்த அளவிற்கு கட்டுப்படுத்துகிறது என சோதிக்கும் முயற்சியில், மத்திய உயிரி தொழில்நுட்பவியல் துறை ஈடுபட்டுள்ளது. இதனை தெரிவித்த இத்துறையின் செயலாளர் ரேனு ஸ்வரூப், கொரோனாவுக்கு எதிரான இந்திய தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர, இன்னும் 12 இல் இருந்து 18 மாதங்கள் ஆகும் என கூறினார்.