WHOக்கான நிதியை நிறுத்திய ட்ரம்ப் ; முடிவை திரும்பப்பெற பலரும் கோரிக்கை!

உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தியதன் மூலம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனித நேயத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உலகை உலுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆறுலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டதால் அதற்கு  சீனாவைக் குற்றம்சாட்டிய ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

சீனாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டதுமே, சீனாவுக்கான எங்களின் எல்லைகளை மூடுவதற்கு உலக சுகாதார அமைப்பிடம் ஆலோசனை கேட்டோம். மூடத்தேவையில்லை என்று ஆலோசனை வழங்கினார்கள். நல்ல வேளை அவர்களின் ஆலோசனையை நிராகரித்தோம். அவர்கள் ஏன் தவறான ஆலோசனை வழங்கவேண்டும். என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் WHO க்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்த ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்திருந்த WHO வின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதனோம், நாங்கள் எல்லா நாடுகளுடனும் நெருக்கமாகத்தான் செயல்பட்டு வருகிறோம். தயவு செய்து இதை அரசியலாக்க வேண்டாம். அமெரிக்காவும் சீனாவும் ஒன்றிணைந்து செயல்படும் நேரம் இது என குறிப்பிட்டார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். கொரோனா குறித்து சீன அரசின் தகவல்களை மட்டுமே WHO நம்பியிருந்ததாகவும், சீனாவிலிருந்து கொரோனா எப்படி பரவியது என முறையாகக் கண்டறிய தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், அதனால் அமெரிக்காவின் நிதி நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த முடிவு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள லான்செட் மருத்துவ இதழின் ஆசிரியர் ரிச்சர்ட் ஹார்ட்டன், டிரம்ப்பின் இந்த முடிவு ” மனித நேயத்திற்கு எதிரான குற்றம்” என விமர்சித்துள்ளார். இப்போது கற்றுக்கொண்ட பாடம் நமக்கு எதிர்காலத்தில் பயன்படும். உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியைக் குறைக்க இது சரியான நேரம் இல்லை என்று WHO முதன்மை அதிகாரி டெட்ரோஸ் அதனோம் குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார நிறுவனத்திற்கான உலக நாடுகளின் நிதியை வழங்குவது அமெரிக்காதான். 15 சதவிகித நிதியை வழங்கும் அமெரிக்கா அதை நிறுத்தியிருப்பதால் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version