வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மேற்கொள்ளாவிட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும்: டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் உடனடியாக வர்த்தக ஒப்பந்ததை மேற்கொள்ளவில்லை என்றால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று சீனாவிற்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார். இதற்கு சீனாவும் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரியை அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் நடந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை, முடிவெடுக்கப்படாமல் முடிந்தது.

இந்நிலையில், அமெரிக்காவுடன் உடனடியாக வர்த்தக ஒபந்தத்தை சீனா மேற்கொள்ள வேண்டும் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், சமீபத்திய பேச்சுவார்த்தை மூலம் தாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக சீனா எண்ணுவதாக தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், 2020க்கு காத்திருக்கலாம் என்று சீனா எண்ணுவதாகவும் கூறியுள்ளார். எனினும், மீண்டும் தானே ஆட்சிக்கு வருவேன் என்றும் அப்போது இதைவிட அதிகப்படியான வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Exit mobile version