இந்திய சுற்றுப்பயணத்தின் போது சபர்மதி ஆசிரமம் செல்லும் ட்ரம்ப்

இந்தியாவுக்கு வரும் 24ஆம் தேதி வருகை தரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் அரசு முறைப் பயணமாக வருகிற 24ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் செல்லும் அவர், அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தவுள்ளார்.

முன்னதாக அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரை பிரதமர் மோடியுடன், அதிபர் டிரம்ப் திறந்த வாகனத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் பேரணி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள மொடெரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகில் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை பிரதமர் மோடியுடன் இணைந்து அதிபர் டிரம்ப் திறந்து வைக்கிறார் .

 இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்தாண்டு அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் நகரில் 50 ஆயிரம் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்துகொண்ட ‘மோடி நலமா’ நிகழ்ச்சியை ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு உள்ளூர் மக்கள் ‘டிரம்ப் நலமா’ என பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையால் பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருந்த குஜராத் மாநில பட்ஜெட் பிப்ரவரி 26 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

Exit mobile version