தேர்தலில் வெற்றி பெற உதவுமாறு ஜின்பிங்கிடம் உதவி கோரிய டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் தேர்தலில் வெற்றி பெற உதவுமாறு, சீன அதிபர் ஜின்பிங்கிடம் கோரியதாக, அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது, உலக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஜான் போல்டன் எழுதியுள்ள “The room where it happened” என்ற புத்தகம் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் போது, டொனால்ட் டிரம்பும், ஜின் பிங்கும் தனித்தனியே சந்தித்து பேசினர். அப்போது, அமெரிக்காவில் சீனா குறித்து விமர்சிக்கப்படுவது குறித்து ஜின் பிங் குற்றம்சாட்டியதாக, புத்தகத்தில் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். இதற்கு, ஜனநாயகக் கட்சியினரிடையே பெரும் விரோதப் போக்கு இருப்பதாக டிரம்ப் பதில் அளித்தார். பின்னர் உடனே உரையாடலை அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து மாற்றிய டிரம்ப், தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு உதவுமாறு கோரியதாக போல்டன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிடமிருந்து வாங்கும் சோயாபீன்ஸ் மற்றும் கோதுமையை சீனா மேலும் அதிகரித்தால், தேர்தலில் வெற்றிபெற உதவியாக இருக்கும் என்று டிரம்ப் கூறியதாகவும் ஜான் போல்டன் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version