சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில், நெல் மூட்டைகளை இறக்க முடியாமல் 11 நாட்களாக லாரி ஓட்டுநர்கள் தவிகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த பள்ளத்தூரில் உள்ள தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கிடங்கில், விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கடந்த 11 நாட்களுக்கு முன்பு 40 லாரிகளில் பள்ளத்தூர் எடுத்து வரப்பட்டது.
ஆனால் நெல் மூட்டைகளை இறக்குவதற்கான தார்பாய்கள் இல்லாததால், லாரிகளுடன் ஓட்டுநர்கள் கடந்த 11 நாட்களாக அங்கேயே தவித்து வருகின்றனர். எப்போது நெல் மூட்டைகள் இறக்கப்படும் என தெரியாமல், சாலையோரம் சமைத்து சாப்பிட்டு, உறங்கக்கூட இடமின்றி அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் அலட்சியத்தை போக்கி, நெல் மூட்டைகளை விரைவாக இறக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.