வைகோவை வாரிவிட்ட திமுக: எம்.பி.யாவதில் சிக்கல்

மதிமுக கட்சியின் தலைவர் வைகோ மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்பதில் ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான திமுகவால்தான் வைகோ இந்த சிக்கலில் மாட்டி உள்ளார். வைகோவின் காலை திமுக வாரிவிட்டது குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது மதிமுகவுடன் கூட்டணி அமைத்த திமுக, அந்தக் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை ஒதுக்கியது. அந்தப் பதவி மதிமுக தலைவர் வைகோவுக்கே கிடைக்கும் எனப் பெரும்பாலானவர்கள் கருதினர். ஏனெனில் கடந்த 1999ஆம் ஆண்டில் சிவகாசி தொகுதியில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு சென்ற வைகோ, அதன் பின்னர் 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு தேர்வாகவில்லை.

ஆனால் வைகோவை நாடாளுமன்ற உறுப்பினராக்குதில் ஒரு சிக்கல் உள்ளதாலேயே திமுக தரப்பு தொடக்கத்தில் இருந்து, ‘மதிமுகவுக்கு எம்.பி. பதவி’ – என்று மட்டும் சொன்னது, வைகோவுக்கு எம்.பி. பதவி என்று சொல்லவில்லை. இதன் பின்னே ஒரு வழக்கு உள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் ’நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ – என்று தமிழிலும், ‘ஐ அக்யூஸ்’ – என்று ஆங்கிலத்திலும் வைகோ ஒரு நூலை வெளியிட்டார். ஈழத் தமிழர்களின் பச்சைப் படுகொலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு எவ்வளவு தொடர்பு உள்ளது என்பதை விளக்குவதாக அது இருந்தது அந்த நூலின் வெளியீட்டுவிழாவில் பேசிய வைகோ திமுகவின் தலைவர் கருணாநிதி மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். அப்போது அந்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் திமுகவைத் தோலுரித்தது.

இதனால் அப்போது ஆட்சியில் இருந்த திமுகவினர் வைகோவைப் பழிவாங்கும் வகையில் அவர் மீது, ‘மத்திய அரசிற்கு எதிராகப் பேசினார், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்’ – என்று குற்றம் சாட்டி வழக்கு தொடுத்தனர். 

இத்தனை ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுவரும் இந்த வழக்கின் தீர்ப்புதான் வரும் 5ஆம் தேதி வெளிவர உள்ளது.வைகோ குற்றவாளி என்று அந்தத் தீர்ப்பு கூறியது என்றால் அவர் எம்.பி.யாகும் வாய்ப்பை இழப்பார்.

கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு, ஈழத் தமிழர்களின் இரத்தம் தோய்ந்த கைகளுடன் எம்.பி. சீட்டுக்காக கூட்டணி வைத்த வைகோ, இது குறித்து சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இப்போது திண்டாடி வருகிறார். ஒருவேளை தன்னால் எம்.பி.யாக முடியாவிட்டால் அந்த இடத்தை மதிமுகவின் யாருக்குக் கொடுப்பது என்றும் அவர் ஆலோசித்து வருகிறார். 

முந்தைய திமுக அரசு செய்த தீமைகள் மக்களுக்கு மட்டுமல்ல, திமுகவின் சொந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கே கூட இன்னும் தொடர்கிறது என்பதையே வைகோவின் நிலைமை காட்டுவதாக அரசியல் பார்வையாளர்கள் இது குறித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Exit mobile version