முழு ஊரடங்கு காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக, நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இரண்டு வார கால ஊரடங்கு என்பதால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்வுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் தங்கி வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே, நீண்ட நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயண கட்டணம் மும்மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மக்கள், செய்வது அறியாமல் தவித்து வருகின்றனர். தனியார் பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் எச்சரிக்கையை, ஆம்னி பேருந்துகள் அலட்சியப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.