மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் மோதல்

திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுடன் நிகழ்ந்த மோதலில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 2 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் இன்று துக்கம் அனுசரிக்க பாஜக அழைப்புவிடுத்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பசீர்ஹட் நகரில் பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இதில் பாஜகவை சேர்ந்த இருவரும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழல் உருவானதால் இணையதள சேவையை துண்டித்த மாவட்ட நிர்வாகம், அதிரடி படையினரை அதிகளவில் குவித்துள்ளது. இதனிடையே உயிரிழந்த பாஜக தொண்டர்களின் உடல்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ், இன்று பசீர்ஹட் நகரில் 12 மணிநேர முழு அடைப்பிற்கு அழைப்புவிடுத்திருப்பதுடன் மேற்கு வங்கம் முழுவதும் துக்கம் அனுசரிக்க கோரியுள்ளார். முன்னதாக பாஜகவினரின் உடல்களை கொல்கத்தாவுக்கு எடுத்து செல்லும் முயற்சியை காவல்துறையினர் அடுத்து நிறுத்தினர். இதனிடையே மேற்கு வங்கத்தில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து அறிக்கை அளிக்குமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version