திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நிகழ்ந்துள்ள கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்திரம் பேருந்துநிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக் கடை இயங்கி வருகிறது. இந்தநிலையில், காலை வழக்கம்போல் கடைக்கு வந்த ஊழியர்கள், நகைகள் கொள்ளை போனது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் காவல் அதிகாரிகள் கடையின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கடையின் வலது பக்க சுவரில் துளையிட்டு, கடைக்கு உள்ளே சென்றுள்ள மர்ம நபர்கள், நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போயிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொள்ளை போன நகைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மற்றும் கடைக்கு அருகில் உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் சூழலில் நகரின் முக்கிய இடத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.