திருச்சி வங்கி கொள்ளை வழக்கில் ஐந்து தனிப்படைகள் அமைப்பு

திருச்சி மண்ணச்சநல்லூரில் பஞ்சாப் நேஷனல் வங்கி லாக்கர்களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி மண்ணச்சநல்லூரில் செயல்பட்டுவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 5 லாக்கர்களை உடைத்து 500 சவரன் நகைகள் மற்றும் 21 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்ற கொள்ளையர்கள், 100 சவரன் நகைகள் மற்றும் இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை தவறவிட்டு சென்றுள்ளனர். இதை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வங்கியில் ஒரு துளை மட்டும் போட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்பொழுது இரண்டு துளைகள் போடப்பட்டு ஒருதுளை முலம் வங்கி லாக்கரையும், மற்றொரு துளை மூலம் மேலாளர் அறையில் இருந்த ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கியின் புளூ பிரிண்டை வைத்து கொள்ளை நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனால் வங்கி ஊழியர்களுக்கு இந்த கொள்ளையில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக டிஜிட்டல் மேப்பிங் முறையில் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொள்ளை குறித்து மாவட்ட எஸ்.பி. ஜாவத் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த மூன்று காவல் ஆய்வாளர்கள் இந்த தனிப்படையில் தற்போது இணைந்துள்ளனர்.

Exit mobile version