திருச்சி அருகே நிகழ்ந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக முதல்முறையாக டிஜிட்டல் மேப்பிங் முறையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சமயபுரம் டோல்கேட்டில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள வங்கியில் கடந்த 27ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 5 லாக்கரில் இருந்து சுமார் 500 சவரன் நகைகள், 21 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கொள்ளை போனவற்றின் முழுமையான தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். வங்கி மேலாளர் அறையில் இருந்த ஹார்ட்டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடி உள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், தலைமையில் 60 போலீசார் கொண்ட 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக முதல்முறையாக டிஜிட்டல் மேப்பிங் முறையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கொள்ளையர்களின் கையில் வங்கியின் ப்ளூ பிரிண்ட் இருந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் வங்கி ஊழியர்கள் துணையுடன் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.