மர்மங்கள் நிறைந்த அந்தமானின் சென்டினல் தீவிற்கு சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பமுடியாது. இந்த முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளார் அமெரிக்க இளைஞர் ஜான் சாவ் (John Chau).அதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்…
அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த 27 வயதான ஜான், நவம்பர் 14-ம் தேதி மீனவர்களின் படகில் சென்டினல் தீவிற்கு புறப்பட்டார் . அன்று இரவே அந்த தீவை அடைந்த குழு, கரையில் இருந்து 500 மீட்டருக்கு முன்பு நங்கூரம் பாய்ச்சியுள்ளனர்.
அதிகாலை ஆனதும், தனது துடுப்பு படகு மூலம் கையில் பைபிள் மற்றும் சில பரிசுப் பொருட்களுடன் அந்த மர்ம தேசத்திற்குள் நுழைந்தார் அமெரிக்கர் ஜான் சாவ் (John Chau).
மீனவர்கள் எதிர்பார்த்தபடியே, ஜான் மீது, பழங்குடிகளின் அம்பு பாயத் தொடங்கியுள்ளது.ஆனால் பின்வாங்காமல் தொடர்ந்து சென்று, தான் கொண்டு வந்த மீன் மற்றும் கால்பந்து உள்ளிட்டவற்றை பழங்குடிகளுக்கு பரிசாக வழங்க முயன்றுள்ளார் ஜான்.
இதனைத் தொடர்ந்து அன்று பிற்பகலில் மீனவர்களின் படகிற்கு, தனது துடுப்பு படகு மூலம் திரும்பியுள்ளார். அவரது உடலில் அம்புகளால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்துள்ளன. அதற்கு மருந்து தடவியதோடு, உணவு அருந்தி விட்டு, சென்டினல் பழங்குடியினரை தான் சந்தித்தது குறித்து தனது டைரியில் பதிவிட்டுள்ளார்.
15-ம் தேதி இரவு மீண்டும் அந்த தீவிற்கு புறப்பட்டுள்ளார். அந்த இரவே அவரை தாங்கள் கடைசியாக பார்த்ததாக அந்த மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவருக்காக 17-ம் தேதி வரை காத்திருந்ததாக தெரிவித்த மீனவர்கள், அன்று ஜான் சாவ் (John Chau ) வை கடற்கரையில் இழுத்து வந்த பழங்குடிகள், மண்ணில் அவரை புதைத்ததாக கூறுகின்றனர்.