முல்லைப் பெரியாறு நீர் தேக்கப்பகுதியில் கார் பார்க்கிங் குறித்தான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அப்பகுதியில் சுற்றுலா ஜீப் உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு தமிழக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேக்கப் பகுதியான, தேக்கடி ஆனவச்சால் பகுதியில் கேரள வனத்துறை கார் பார்க்கிங் அமைத்திருக்கிறது. இந்த இடம் தமிழக பொதுப்பணித் துறைக்குச் சொந்தமானது. எனவே, அங்கு கார்பார்க்கிங் அமைக்க தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு, சென்னை தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் கட்டுமானப்பணிகள் செய்யக்கூடாது என்ற நிபந்தனையை மட்டும் விதித்து, தரையை பயன்படுத்த பசுமை தீர்ப்பாயம் அனுமதித்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வாதாடி வருகிறது. சர்ச்சைக்குரிய கார் பார்க்கிங் இடத்தில் கேரள வனத்துறை வாகனங்கள் சேவைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பார்க்கிங் ஏரியாவைப் பயன்படுத்துவதில் தங்களுக்கும் அனுமதி வேண்டும் என கேரள சுற்றுலா ஜீப் வாகன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். இதற்கு தமிழகத்திற்குரிய இடத்தை மேலும் உரிமைகோர பார்ப்பதாக கண்டனம் வலுத்துள்ளது.