குப்பைகளை விற்பனை செய்வதற்கான இணையதளம் துவக்கம்

சென்னையில் உருவாகும் குப்பைகளை விற்பனை செய்வதற்கான பிரத்யேக இணையதளத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். 

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் 5000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்தக் குப்பைகளை மட்கும் குப்பைகள் மட்காத குப்பைகள் என தரம் பிரித்து விற்பனை செய்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் Madras waste exchange என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளத்தை சென்னை மாநராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். 

Swiggy, zomato செயலிகளை போன்று குப்பைகளை விற்பனை செய்வதற்கு ஒரு தளம் உருவாக்க வேண்டும் என இந்த இணையதளம்  தொடங்கப்பட்டுள்ளது. குப்பைகள் பற்றிய விவரங்களை இந்த இணையத்தில் பதிவேற்றம் செய்தால் மாநகராட்சியோ, அல்லது தனியார் அமைப்புகளோ குப்பைகளை சேகரித்துக் கொள்வர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் மறுசுழற்சி செய்து உரமாகவும் பல்வேறு பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படவுள்ளது. இதன் மூலமாக சென்னையில் வருங்காலத்தில் குப்பைகளின் அளவு குறையும் எனவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் பெருகும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தெரிவித்தார். 

குப்பைகளை விற்பனை செய்வதற்கு இணையதளம் மட்டுமல்லாது செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகரில் சுமார் 200 இடங்களில் குப்பைகளை பிரித்தெடுக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் குப்பைகளை விற்பனை செய்ய வேண்டும் என நினைக்கும் தனி நபர் கூட இந்த செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். அதே போல் வியாபாரிகளும் பதிவு செய்து தேவையான பயனை பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இதுபோன்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளதாகவும் சென்னை போன்ற பெருநகரங்களில் குப்பை கிடங்குகள் உருவாகுவதை முற்றிலும் தடுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version