டெனெட் திரைப்படத்தை பைரசியில் பார்த்த குற்றத்திற்காக பிரபல சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.
தலைகீழாகத்தான் குதிக்கப் போகிறேன்… என்று கவுண்டமணி குதிப்பதுபோல, எந்த திரைப்படத்தைப் பார்த்தாலும் அதை 360 பாகையில் ஆராய்ச்சி செய்து, கடைசியில் எதுவுமே சரியில்லை என்று சொல்வதுதான் புளூ சட்டை மாறனின் ஸ்டைல். இப்போது ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டஃபர் நோலனின் “டெனெட்” திரைப்படத்தை விமர்சனம் செய்து, விவாகரத்தில் சிக்கியிருக்கிறார். ராபட் பேட்டின்சன், ஜான் டேவிட் வாஷிங்டன், டிம்பிள் கபாடியா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம், கொரோனா ஊரடங்கால் தள்ளிப்போனது. இப்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 70 நாடுகளில் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டது. டைம் ட்ராவல் போல டைம் இன்வர்ஸ் என்ற அறிவியல் கருத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், படத்தை விமர்சனம் செய்துள்ள புளூ சட்டை மாறன், கிறிஸ்டஃபர் நோலனின் இயக்கம் சிறப்பாக இல்லை எனவும், படத்தில் நடித்த நடிகர்களுக்கு நடிக்கவே தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். படம் இந்தியாவில் ரிலீஸே ஆகாத நிலையில் இவர் மட்டும் எப்படி பார்த்தார் என்ற கேள்விக்கு.. அதெல்லாம் தொழில் ரகசியம் என அந்த வீடியோவில் தெரிவிக்கிறார். விமர்சனத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர், புளு சட்டை மாறன் பைரசியில் படம்பார்த்து விமர்சனம் செய்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ்-க்கு ஈ-மெயில் அனுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், சைபர் க்ரைம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.