குடியரசுத் தினவிழாவையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்

குடியரசுத் தினவிழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் வரும் 22 மற்றும் 24ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் குடியரசுத் தினவிழா வரும் 26ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ளது. சென்னையில் குடியரசுத் தினவிழா மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே நடைபெற உள்ளது. வரும் 22 மற்றும் 24ம் தேதிகளில் குடியரசுத் தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால், குடியரசு தினத்தன்றும், ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் நாட்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமராஜர் சாலையில், கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை காலை 6 மணி முதல் காலை 10மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவித்துள்ளது. அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே செல்லும் சரக்கு வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை, லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர், ராயப்பேட்டை மருத்துவமனை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

அடையாறு பகுதியிலிருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்துகள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், சிவசாமி சாலை, நீலகிரி சந்திப்பு, மியூசிக் அக்காடமி, ராயப்பேட்டை மருத்துவமணை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வே சென்றடையலாம்.

மயிலாபூரில் இருந்து அண்ணாசதுக்கம் செல்லும் மாநகர பேருந்து வழித்தடம் 45பி மற்றும் 12ஜி ஆகியவை நீல்கிரீஸ் சந்திப்பு, மியூசிக் அகடமி, ஸ்மித் சாலை, அண்ணா சாலை வழியாக அண்ணா சதுக்கம் சென்றடையும்

பாரிமுனையில் இருந்து அடையாறு செல்லும் அனைத்து வாகங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் திருப்பிவிடப்பட்டு அண்ணாசாலை, அண்ணாசிலை, அமெரிக்க தூதரகம் கதீட்ரல் சாலை, சாந்தோம் சாலை வழியாக அடையாறு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version