நீலகிரி மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்துள்ளார்.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் நீலகிரி வனத்துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2007ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, சுப்பிரமணியத்தின் வாரிசு வேலைக்கு அவரது மகனாக இருந்து திருநங்கையாக மாறிய தீப்தி விண்ணப்பித்திருந்தார். தற்போது கவுண்டம்பாளையத்தில் வசித்து வரும் இவருக்கு நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் முதல் திருநங்கை, வனத்துறை இளநிலை உதவியாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பணியில் பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தீப்தி, இத்துறையில் திறம்பட செயல்பட்டு தன்னைப்போல் சாதிக்க இருக்கும் திருநங்கைகளுக்கு, தன்னால் இயன்ற உதவிகளை நிச்சயமாக செய்வேன் என்று தெரிவித்தார்.