உலகில் வேறெங்குமே இப்படி ஒரு இடத்தை பார்க்க முடியாது என சொல்லும் அளவிற்கு பார்ப்போரை சொக்க வைக்கிறது Trang An நிலப்பகுதி.. அழகான வியட்நாம் நாட்டில் அம்சமாக இருக்கும் இடம் தான் Trang An நிலப்பகுதி. சிவப்பாற்றின் பாதையில், அழகிய குன்றுகள், சுண்ணாம்பு பாறைகள் நிறைந்து உருவாகியுள்ள இடம் இது.
அழகிய மலைக்குன்றுகள், அதை சுற்றி ஓடும் தெளிந்த நீரோடைகள், அதில் உலாவும் தவளைகள், மீன்கள் என இயற்கையின் ஊற்றுக்கண்ணே இதுதானோ என பிரம்மிக்கத்தோன்றும் அளவுக்கு வியப்பளிக்கிறது இவ்விடம். தவிர பல்லாயிரக்கணக்கான அபூர்வ உயிரினங்கள் இங்கே காணப்படுகின்றன. மன்னர் கால நடைமுறைகளை நினைவுபடுத்தும் வண்ணம், ஆண்டுதோறும் இங்கே விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.இங்கிருக்கும் சுண்ணாம்புப்பாறைகளை ஆய்வுசெய்யும் போது, 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கே மனித நடமாட்டம் இருப்பது தெரியவருகிறது.யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படும் இந்த பொக்கிஷ நிலத்தின் பரப்பு 6,226 hectare ஆகும்.சுற்றுச்சூழல் மாசுபாட்டின் பாதிப்பு இங்கே இம்மியளவும் தெரியவில்லை… ஏனெனில் இங்கே பொதுமக்கள் குடியேற தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுலா பயணிகள், பணியாளர்கள் தவிர, அங்கே நிரந்தரமாக தங்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.
சுற்றி இருக்கும் அழகழகான கிராமங்கள், நெல் வயல்கள் இவ்விடத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கின்றன. வியட்நாம் நாட்டில் பண்டைய தலைநகரம் இப்பகுதியில் தான் இயங்கிவந்துள்ளது. பண்டைய கால கோயில்கள், புத்த மடங்களும் ஏராளமாக அங்குள்ளன.