சென்னையில் இன்று முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் புறநகர ரயில் சேவை இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அத்தியாவசியப் பணியாளர்கள் என்று மாநில அரசு அங்கீகரித்துள்ள நபர்கள் மட்டுமே சிறப்பு புறநகர் ரயிலில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமானிய மக்கள் புறநகர ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. ரயிலில் பயணம் செய்வோர், உரிய அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்றும் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தவறாமல் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மிகுந்த பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.