விழுப்புரத்தில் தடுப்பூசி போடுவதாக கூறி வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு சோதனை சாவடியிலேயே தடுப்பூசி போடும் புதுயுக்தியை காவல்துறையினர் கையில் எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதாக கூறி, ஊரை சுற்றி வட்டமடிப்பதையே சில ”பைக்” கிளிகள் வாடிக்கையாக வைத்துள்ளன.
இதையடுத்து அந்த கிளிகளின் சிறகை ஒடிக்க மாற்று வழி யோசித்த விழுப்புரம் மாவட்ட காவல்துறை, சோதனை சாவடியிலேயே தடுப்பூசி மையம் அமைத்து, சாக்கு கூறும் வாகன ஓட்டிகளுக்கு தடுப்பூசி செலுத்தி அனுப்பி வைக்க தொடங்கியுள்ளது.
காவல்துறையினரின் புது வகையான யுக்தியை அறியாத அந்த பைக் கிளிகள், தடுப்பூசி செலுத்த ஊசியை எடுத்ததும் ”நான் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி விட்டேன்” என சமாளித்து வழியும் காமெடி காட்சிகளும் அரங்கேறி வருகிறது.
ஊடரங்கை கடைபிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் மேற்கொண்டுள்ள இந்த விநோத ட்ரீட்மெண்ட் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.