போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான சென்னை எழும்பூரில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய பேரணியால் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது. இதனால் அலுவலகத்திற்கு செல்பவர்களும், பொதுமக்களும் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி இன்று சென்னை எழும்பூரில் பேரணி நடைபெறும் என திமுக ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் அப்பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் காவல்துறையினர் திமுகவின் பேரணிக்கு அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையின் அறிவுறுத்தலையும் மீறி திமுகவும் அதன் கூட்டணிக்கட்சியினரும் இணைந்து பேரணியை நடத்தினர். இதனால் லேன்ஸ் கார்டன் சாலை, சிவந்தி ஆதித்தனார் சாலை மற்றும் ராஜரத்தினம் விளையாட்டுத் திடல் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 12:30 மணி வரை போக்குவரத்து தடைபட்டதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். மேலும், பேரணிக்கு அழைப்பு விடுத்துவிட்டு அதில் கலந்துகொள்ளாமல் இருந்த உதயநிதி ஸ்டாலின் மீது போராட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்தனர்.