ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவற்றை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இ-பதிவு இன்றி நூற்றுக் கணக்கான வாகனங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுமட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வழக்கம்போல், பல வாகனங்கள் இ பதிவு இன்றி வருகின்றன. இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறையினர் கண்டும் காணாமலும் வாகனங்களை அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் இ-பதிவு இன்றி சென்ற வாகனங்களை காவல்துறையினர், தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் வந்ததால், வேறு வழியின்றி தடுப்புகளை திறந்துவிட வேண்டிய நிலைக்கு, காவலர்கள் தள்ளப்பட்டனர்.
முன்னதாக சென்னையில் 12 காவல் மாவட்டங்களில்153 வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்துவதாக, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்திருந்தார். இதனை கண்காணிக்க 205 இரு சக்கர வாகனங்களிலும், 309 காவல்துறை வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், இ-பதிவு இன்றி செல்லும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் காவலர்கள் திணறி வருகின்றனர்.