பாரம்பரியம் மாறாமல் நடைபெறும் சேத்தியாதோப்பு வாரச்சந்தை

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமான வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே அமைந்துள்ளது சேத்தியாத்தோப்பு பேரூராட்சி. சுமார் இரண்டு கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பேரூராட்சி பதினைந்து வார்டுகளை கொண்டது. இங்கு சிறப்பு வாய்ந்த விஷயமாக அனைவராலும் விரும்ப படுவது பாரம்பரியமான சேத்தியாத்தோப்பு வாரச்சந்தைதான்.

இந்தச்சந்தை ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ, 70 ஆண்டுகளை கடந்தும் அதன் பழமை மாறாமல் இன்றும் அப்படியே இருந்து வருகிறது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தைக்கு சேத்தியாத்தோப்பு சுற்று வட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

விடியற்காலையில் தொடங்கும் இந்த சந்தை இரவு சுமார் 10 மணி வரை நடைபெறும். சுற்று வட்டார பகுதிகளில் விளையும் கத்திரி, வெண்டைக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி, கருணைக்கிழங்கு, மாங்காய், வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகளை உற்பத்தியாளர்களே அதனை நேரடியாக எடுத்து வந்து விற்பனை செய்கிறார்கள்.

காய்கறிகள் மட்டுமின்றி மளிகைப்பொருட்களும் இங்கு கிடைக்கிறது. கறிவேப்பில்லை, கொத்தமல்லி, கீரைகள் முதல், கருவாடு, உலரவைக்கப்பட்ட இறால், வத்தல், வடகம் என விதவிதமாக பொருட்கள் இங்கு கிடைக்கின்றன.

இந்த சந்தையில் தேக்கு, சவுக்கு, பலா மரக்கன்றுகள், ரோஜா பூச்செடிகள், காய்கறி, கீரை, கிழங்கு விதைகள் உள்ளிட்டவைகளை இங்கு வருபவர்கள் பேரம் பேசி வாங்குவது தனிச்சிறப்பு. பொருட்களை விலைகுறைவாக கொடுத்தாலும் அதன் தரத்தை சரியாக வைத்து வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள்.

சந்தையின் மிகப்பெரிய சிறப்பே எழுபதாண்டுகளை கடந்தும் ஒரே மாதிரியாக, கிராமத்து மண்மனம் மாறாமல் நடைபெற்று வருவதுதான். பல்வேறு வெளியூர்களில் உள்ள பொதுமக்கள், அலுவலகங்களில் விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்வதே இந்த சந்தையின் மிகப்பெரும் சிறப்பு.

Exit mobile version