பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வரும் விவசாயி

சேத்தியாத்தோப்பு அருகே இயற்கை உரங்களை பயன்படுத்தி பத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார் விவசாயி ஒருவர், அவரைப்பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு

கடலூர் மாவட்டம் மழவராயநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வம். சாதாரண விவசாயியாக வாழ்ந்து வந்த செல்வம், தனது நண்பரின் தூண்டுதலால் கடந்த எட்டாண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு பாராம்பரிய நெல் ரகத்தை பயிரிட முயற்சித்தார்.

அவ்வாறு பயிரிட்ட நெல் ரகமானது சிறப்பாக வளர்ந்தது. நன்றாக விளைச்சலையும் கொடுத்தது. அதன்பேரில் இவருக்கு பாரம்பரிய நெல்ரகங்களைப் பற்றிய ஆர்வம் அதிகளவில் ஏற்ப்பட்டது. இந்நிலையில் செல்வம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அரசு வேளாண்மை கருத்தரங்கு, இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் பல்வேறு விவசாயிகளுடன் கலந்துரையாடி தன்னுடைய தேடலை வளர்த்துக்கொண்டார்.

பின்னர் பாரம்பரிய நெல்லில் ஏகப்பட்ட ரகங்கள் இருப்பதை அறிந்துக்கொண்ட அவர் கொஞ்சம்,கொஞ்சமாக தன்னுடைய வயலில் பயிரிட ஆரம்பித்தார். அதுவும் ஒரே வயலில் இரண்டுக்கு மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகத்தை பயிரிட்டார்.அவ்வாறு பயிரிடப்பட்ட நெல்ரகமானது சிறப்பாக வளர்ந்தது.

செல்வம் தற்போது இமயமலைப் பகுதிகளில் மட்டும் விளையக்கூடிய சிங்கார் நெல் முதல்,இலுப்பைப்பூ சம்பா, வாசனை சீரகசம்பா, சொர்ணமசூரி, ரோஜாபொன்னி, துளசி சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா, கருப்பு கவுனி, வைகறை சம்பா, கருடன் சம்பா, கருங்குறுவை என பதினோரு நெல் ரகங்களை பயிரிட்டுள்ளார்.

இந்த நெல் ரகங்கள் அனைத்தும் தமிழக மண்ணில் வளர சாத்தியமற்ற சூழல் இருந்த போதிலும் தனது மாறுபட்ட முயற்சியால் வெற்றிகரமாக விளைவித்து வருகிறார். தற்போது அவை அனைத்தும் மிக நன்றாக வளர்ந்துள்ளன.

இவ்வாறு தனது வயலில் விளைகின்ற பாரம்பரிய நெல்லை இவரே அரிசியாக்கி விற்பனை செய்து நல்ல வருமானமும் ஈட்டி வருகிறார். மேலும் மற்ற விவசாயிகளுக்கும் இலவசமாக நெல் ரகங்களைத் தந்து உதவுகிறார்.

பாரம்பரிய நெல் விவசாயி செல்வத்திற்கு வேளாண் துறை சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறையினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

Exit mobile version