பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கக் கோரி சிவகாசியில் வணிகர்கள் ஒருநாள் அடையாள கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசடைவதாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பட்டாசு தொழிலுக்கு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்தது.
இத்தகைய நிபந்தனைகளால் தீபாவளிக்கு முன்பு சிவகாசியில் செயல்பட்டு வந்த ஆயிரத்து 76 பட்டாசு ஆலைகளை மூடி கடந்த 42 நாட்களாக பட்டாசு உரிமையாளர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க கோரியும், சுற்றுசூழல் விதியில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்க கோரியும் சிவகாசியில் வணிகர்கள் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடையடைப்பு போராட்டத்தால் சிவகாசியில் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.