அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் தான் தங்கத்தின் விலை உயர்விற்கு முக்கிய காரணம் என்று நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் கிலானி தெரிவித்துள்ளார்.
தங்கத்தின் விலை இன்று கிராம் 1க்கு 3 ஆயிரத்து 112 ரூபாயும், சவரன் 1க்கு 24 ஆயிரத்து 896 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 1 சவரன் நகை 25 ஆயிரம் ரூபாயை நெருங்கி விட்டது. இந்தநிலையில் சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கிடையே வர்த்தகப் போர் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக நீடித்து வரும் இந்த வர்த்தகப் போரினால் சர்வதேசப் பங்குச்சந்தை சரியத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக உலக முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் மதிப்பு அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. முதலீடு செய்பவர்களுக்கு இது லாபத்தை ஈட்டித்தந்தாலும் அன்றாடத் தேவைகளுக்காக தங்கம் வாங்குபவர்களுக்கு இது பெரும் சுமையாக உள்ளது. எனவே வரும் காலங்களிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.