காங்கிரஸ் ஆட்சியின் போது 9000 தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது 9000 தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக, மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு, யாருடைய கணினிகளையும், உளவு பார்க்க மத்திய அரசு சமீபத்தில் கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது தனி நபர் சுதந்திரத்தை பாதிக்கும் செயல் என கூறி மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அரசு உத்தரவுடன் தொலைபேசி உரையாடல்கள், இமெயில்கள் உளவு பார்க்கப்பட்டதன் புள்ளி விபரத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு மாதத்திற்கு 9 ஆயிரம் தொலைப்பேசி அழைப்புக்களும், 500 இமெயில்களும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பில் அக்கறை உள்ளது போன்று காங்கிரஸ் பாசாங்கு செய்யக் கூடாது எனவும் அவர் சாடியுள்ளார்.

Exit mobile version