திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கக்கூடிய நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சாண்டா கிளாஸ் பொம்மையை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
இதேபோல் மதுரையில் 100 அடி உயரம் கொண்ட இயேசு கிருஸ்துவின் படம் பொறிக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் வானில் பறக்கவிடப்பட்டது. உலகமெங்கும் கிறிஸ்துமஸ் தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துவ பேராலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிலையில், இயேசு கிருஸ்து தனது தாயாருடன் இருப்பது போன்று படம் அச்சடிக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் தரையில் இருந்து பாராசூட் உதவியுடன் வான் நோக்கிப் பறந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.