சுற்றுலா தலங்களில்செல்ஃபி எடுப்பதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போதைய நாகரீக உலகில், இளம் சமூகத்தினரிடையே காணப்படும் ஒரு முக்கிய பழக்கம், செல்ஃபி எடுப்பது. சந்தோசமான நிகழ்வாக இருந்தாலும், சோக நிகழ்வாக இருந்தாலும், விடாமல் செல்ஃபி எடுக்க தவற மாட்டார்கள். இந்த செல்ஃபி மோகத்தால், சமீப காலமாக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. தாங்கள் எடுக்கும் புகைப்படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக, சுற்றத்தை பாராமல் அவர்கள் செய்யும் தவறுகளால், எதிர்பாராத அசம்பாவிதங்கள் நிகழ்கிறது. இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர், செல்ஃபி விபத்துகளை தடுத்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளார்.
செல்ஃபி விபத்து ஏற்படும் பகுதிகளை முதலில் அடையாளம் கண்டறிந்து, அந்த இடங்களில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்ட பகுதி என்ற எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் போக முடியாத வகையில், தடுப்புகளை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.