தமிழகத்தின் டாப்-10 கோட்டைகள்

செஞ்சி கோட்டை

வீரம் என்ற சொல்லுக்கும் செஞ்சி என்ற சொல்லுக்கும் வெகு பொருத்தம். தேசிங்கு ராஜாவின் ஆட்சி காலத்தில் புகழின் உச்சியில் இருந்தது செஞ்சி. இன்று புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது செஞ்சி. மராட்டிய வீர சிவாஜி புகழ்ந்து பாராட்டிய கோட்டை இந்த செஞ்சி.

செயின்ட் டேவிட் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எத்தகைய சிறப்புகள் உண்டோ, அதற்கு சற்றும் குறையாமல் சிறப்பு வாய்ந்தது கடலூர் செயின்ட் டேவிட் கோட்டை. மராத்தியர்களால் கட்டப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியால் வாங்கப்பட்டு இறுதியில் ஆங்கிலேரின் ஆட்சிக் கூடமாக சிலகாலம் செயல்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை

திருச்சி என்றதும் உச்சிப் பிள்ளையார் கோயில் நினைவுக்கு வரும். ஆனால் அந்த கோயில் அமைந்துள்ளதே மலைக்கோட்டைக்குள் தான். விஜயநகர பேரரசால் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர்கள், ஆற்காடு நவாப் என பல கைமாறிய போதிலும் புகழ் குன்றாமல் மலைபோல் நிற்கிறது மலைக்கோட்டை.

மனோரா கோட்டை

மாவீரன் நெப்போலியனுக்கும், நெல்விளையும் தஞ்சைக்கும் சம்பந்தம் உண்டா? உண்டு மனோரா கோட்டை மூலமாக. ஆங்கிலேயர்கள் நெப்போலியனை தோற்கடித்ததன் நினைவாக சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது இந்த கோபுரம். கலங்கரை விளக்காகவும் அப்போது இது செயல்பட்டது. அகழிகளும், சுற்றுச்சுவர்களாலும் சூழப்பட்டதால் கோட்டையாகவும் இது பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி கோட்டை

வரலாற்றின் தொட்டில்களில் ஒன்றாக கருதப்படும் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது கிருஷ்ணகிரி கோட்டை. கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டு பிஜப்பூர் சுல்தான் வசம் சென்று வீரசிவாஜி வசம் கடைசியாக வந்து சேர்ந்தது. இதன் தலைநகராக ஒருகாலத்தில் ஜெகதேவி இருந்தது, கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் பாரமகால் என்ற அழைக்கப்பட்டன.

திண்டுக்கல் கோட்டை

1605-ம் ஆண்டு முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டு இந்த கோட்டை 18-ம் நூற்றாண்டில் மைசூர் உடையார் வம்சத்தினரால் கைப்பற்றப்பட்டது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனியினர் தங்கள் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தனர். பீரங்கியால் கூட துளைக்க முடியாத வலுவான கோட்டையாக அக்காலத்தில் இது திகழ்ந்தது.

வட்டக்கோட்டை

கன்னியாகுமரி கடற்கரை என்றதும் விவேகானந்தர் பாறையும், திருவள்ளுர் சிலையும் தான் பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால் அங்கு 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அதுவும் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட கோட்டை உள்ளது. அதுதான் வட்டக்கோட்டை. டச்சு கடற்படை தளபதி கேப்டன் டி.லெனாய் என்பவரால் இது கட்டப்பட்டது. தற்போது இந்த கோட்டை தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

உதயகிரி கோட்டை

கன்னியாகுமரிக்கு செல்வோர் பார்க்க தவறும் இடங்களில் உதயகிரி கோட்டையும் ஒன்று. நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையில் புலியூர்குறிச்சி என்ற இடத்தில் உள்ளது இக்கோட்டை. 17-ம் நூற்றாண்டில் டச்சு தளபதி டி.லெனாய் என்பவரால் கட்டப்பட்ட இந்த கோட்டையை திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா புனரமைத்தார். உதயகிரி கோட்டை என்பதை விட டி.லெனாய் கோட்டை என்றே அழைக்கப்படுகிறது.

Exit mobile version