தமிழகத்தின் டாப்-10 உணவுகள்

இட்லி

தமிழர்களின் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒரு உணவு. தமிழர்களின் தேசிய உணவு என்று சொல்லுமளவுக்கு இட்லிக்கு நாம் அடிமை. காஞ்சிபுரம் இட்லி, மதுரை இட்லி என்று ஒவ்வொரு வட்டாரத்திற்கும் தனிச்சிறப்பு மிக்க இட்லிகள் தமிழ்நாட்டில் உண்டு. காலை உணவின் ராஜா இந்த இட்லி.

தோசை

வட்டமாக சுட்டு எடுக்கும் தோசை இல்லாமல் தமிழர்களின் பொழுது விடிவதில்லை. பொடி தோசை, மசால் தோசை, ஊத்தப்பம் என்று எண்ணற்ற விதங்களில் செய்யப்படும் அட்டகாச ஒரு உணவு தான் தோசை.

பொங்கல்

ஆரம்பத்தில் கோயில்களில் பிரசாதமாக செய்யப்பட்டு பின்னர் நமது வீட்டு சமையலறைகளில் முக்கிய இடம் பிடித்தது இந்த வெண்பொங்கல். மிளகு சேர்த்து செய்யப்படும் பொங்கலுக்கு மெதுவடை நல்ல காம்பினேஷனாக தமிழர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

பூரி கிழங்கு

கோதுமை மாவை மூலப்பொருளாக கொண்டு எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பூரி அடிப்படையில் வடஇந்திய உணவாக இருந்தாலும் தமிழர்களின் நாவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த காலை உணவாகும். அதுவும் உருளைக்கிழங்கு – வெங்காயம் சேர்த்து உருவாக்கப்படும் மசாலா, பூரிக்கு பொருத்தமான ஜோடி.

உப்புமா

ரவையை கொண்டு செய்யப்படும் உப்புமா அவசர நேரத்திற்கு உதவும் அற்புதமான உணவு. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அதிரடியாக செய்யக்கூடிய ஆபத்பாந்தவன் தான் இந்த உப்புமா.

சேமியா

உப்புமாவைப் போன்றே தடலாடியாக கைகொடுக்கும் ஓர் உணவு தான் சேமியா. கொதிக்கின்ற நீரில் உலர்ந்த சேமியாவை போட்டு எடுத்தால் 5 நிமிடத்தில் உண்ணக்கூடிய சேமியா தயார். வயிறுக்கு உபாதை தராதததால் நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்யக்கூடிய உணவாக சேமியா திகழ்கிறது.

சப்பாத்தி

தென்னிந்தியாவுக்கு அரிசி எப்படி பிரதான உணவுப் பொருளோ, வடஇந்தியாவுக்கு கோதுமை. அதில் இருந்து உருவாக்கப்படும் சப்பாத்தி தான் ஒட்டுமொத்த வடஇந்தியாவின் வயிறு வளர்க்கும் உணவு. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை டயட் உணவுகளில் முக்கியமானதாக சப்பாத்தி விளங்குகிறது.

இடியாப்பம்

நூல் நூலாக பிரியும் இடியாப்பம் அதற்கு தோதான தேங்காய் பால் எப்படி என்று கேட்டால் தேவாமிர்தம் என்று கூறுவார்கள். அசைவப் பிரியர்கள் ஒருபடி மேலேபோய் இடியாப்பத்திற்கு ஆட்டுக்கால் பாயா தான் ஆகச்சிறந்த ஜோடி என்று சான்றிதழ் வழங்குவார்கள். விசேஷ காலங்களில் இடியாப்பத்திற்கு தனியிடம் உண்டு.

பரோட்டா

பரோட்டாவுக்காக சொத்தை எழுதி வைக்கும் அளவுக்கு வெறிப்பிடித்த ரசிகர்கள் பரோட்டாவுக்கு உண்டு. பரோட்டா குருமா, பொரித்த பரோட்டா, வீச்சு பரோட்டா, சிலோன் பரோட்டா என்று விதவிதமான பரோட்டாக்கள் தமிழ்நாட்டின் வீதியெங்கும் காணப்படும். வீட்டில் குறைவாக செய்யப்பட்டாலும் கடையில் வாங்கி வந்தாவது பரோட்டா சாப்பிடுவது நமது பழக்கங்களில் ஒன்றாகும்.

பழைய சோறு

எத்தனை விதமான சிற்றுண்டிகள், காலை உணவுகள் வந்தாலும் தமிழ்நாட்டின் டாப் மோஸ்ட் காலை உணவு என்றால் அது பழையது என்று சொல்லப்படும் பழைய சோறுதான். இரவு மீதமாகும் சோற்றில் நீரை ஊற்றி காலையில் தயிர் கலந்து வெங்காயம் அல்லது பச்சை மிளகாயோடு சாப்பிடப்படும் பழையதே நமது பண்பாட்டு உணவு.

Exit mobile version