முழு சந்திர கிரகணத்தை ஒட்டி, ரத்த நிலா அரிய நிகழ்வு இன்று வானில் தோன்ற உள்ளது.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் பூமி வரும் நிகழ்வுதான் சந்திர கிரகணம். இதில் முழு சந்திர கிரகணம் என்பது மூன்று ஆண்டுகளுக்கு 2 முறை நிகழும். முழுமையான சந்திர கிரகணத்தின் போது நிலவு கூடுதல் ஒளியுடன் ரத்தச் சிவப்பு நிறத்தில் மிளிரும் என்பதால், அதை ரத்த நிலா என்று அழைக்கின்றனர்.
அப்படிப்பட்ட முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. சந்திர கிரகணத்தின் போது, சூரிய ஒளி, புவியின் வளி மண்டலத்தின் வழியாக பயணித்து, நிலவை சென்றடைவதால் நிலா இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மின்னும். இந்த அரிய நிகழ்வு, இந்தியாவில் இன்று பிற்பகல் 3.15 மணி முதல் மாலை 6.22 மணி வரை நிகழும். மாலை 4.41 முதல் 4.56 வரையான 15 நிமிடங்கள் முழு சந்திர கிரகணம் நிகழும். கிரகணத்தின் போது இந்தியாவைப் பொறுத்த வரை, நிலவு கிழக்கு அடிவானத்தின் கீழே இருக்கும் என்பதால், தமிழகத்தில் பார்ப்பதற்கு வாயப்பில்லை.