கனமழை மற்றும் வரத்து குறைவால், தமிழகத்தில் தக்காளி விலை ரூ.50-ஆக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை கவலையடையச் செய்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு பெருமளவிலான தக்காளி வரும் நிலையில், அண்மையில் பெய்த மழை காரணமாக, உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு 60 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும் நிலையில், தற்போது 40 லாரிகளில் மட்டுமே தக்காளி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 48 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கர்நாடகாவில் இருந்து ஒரு சில தினங்களில் தக்காளி வரத்து சீரடையும் என்றும் கூறியுள்ளனர்.
தக்காளி விலை உயர்வால் அதிருப்தியடைந்துள்ள இல்லத்தரசிகள், விலையை கட்டுக்குள் கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.