கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரையில் பணப்பட்டுவாடாவிற்கான டோக்கனை விநியோகித்ததாக அமமுகவை சேர்ந்த பெண்களை, பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடுக்கரையில் அமமுகவை சேர்ந்த மூன்று பெண்கள், சுயஉதவிக்குழு என்று கூறி அங்குள்ள பெண்களை ஒன்று திரட்டி தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதற்காக டோக்கன் விநியோகித்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் முடிந்தவுடன் பணம் தரப்படும் என்றும் அமமுகவிற்கு ஓட்டு போடுங்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தகவலறிந்த பாஜகவினர், அந்த பெண்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு அந்த பெண்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜகவினர் கடுக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டோக்கன் விநியோகித்த அமமுக பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.