காண்பவர்களை வியப்புக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாக்கும் வகையில் முழுவதும் தங்கத்தில் செய்யப்பட்டு, வைரக் கற்கள் பதிக்கப்பட்ட கழிவறைக் கோப்பை ஒன்று, சீனாவின் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.
நகைகளைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற ஹாங்காங் நிறுவனமான ‘ஆரோன் ஷம்’, தங்கத்தினால் ஆன கழிவறைக் கோப்பையை உருவாக்கி உள்ளது. முழுவதும் தங்கத்தினாலான இந்தக் கழிவறைக் கோப்பையில், 40 ஆயிரத்து 815 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரங்கள் 335 கேரட் தரம் கொண்டவை. கழிவறைக் கோப்பையில் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ள இடம் மட்டும் துப்பாக்கி குண்டுகளால் கூட துளைக்கமுடியாத புல்லட் புரூஃப் ரக கண்ணாடியால் மூடப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 9 கோடியே 13 லட்சம் ஆகும்.
இதனால், தங்கத்தில் வைரம் பதிக்கப்பட்ட இந்த கழிவறைக் கோப்பையே தற்போது உலகின் மிக விலையுயர்ந்த கழிவறைக் கோப்பையாகக் கருதப்படுகிறது. இது கின்னஸ் உலக சாதனைக்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்துவரும் இரண்டாவது சர்வதேக இறக்குமதிக் கண்காட்சியில், இந்த கழிவறைக் கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பலர் ஆச்சர்யத்தோடும், அதிர்ச்சியோடும் பார்த்துச் செல்கின்றனர். இணையத்திலும் இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இந்தக் கண்காட்சிக்குப் பிறகு, இதனை அருங்காட்சியகத்தில் வைக்கப் போவதாகவும், விற்கும் எண்ணம் இல்லை எனவும், இந்தத் தங்கக் கழிவறைக் கோப்பையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.