தத்துவக் கவிஞன் கலீல் ஜிப்ரானின் 90வது நினைவு தினம் இன்று..

(( கலீல் ஜிப்ரான் – நினைவு தினம் – ஏப்ரல் 10 ))

“சொற்களில் ஞானம் இல்லை; அவற்றின் பொருளில் அது புதைந்து கிடக்கிறது” என உரைத்தவர் கலீல் ஜிப்ரான். சொல்வதையே-எழுதுவதையே தனது வாழ்க்கையாக வாழ்ந்து மறைந்த அவரின் 90-வது நினைவு தினம் இன்று..

1883-ஆம் ஆண்டு லெபனானில் பிறந்த கலீல் ஜிப்ரான், 1895-இல் தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். புத்தக வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவர், ஓவியக் கல்வியும் பயின்றார். அதன் பின்னர் பிரான்ஸைச் சேர்ந்த நவீன ஓவியரான அகஸ்தீன் ரூதேனிடம் பல மாதங்கள் ஓவியம் பயின்று, சில கண்காட்சிகளையும் நடத்துகிறார். எனினும் ஓவியம் வரைவதற்கான அதே மனநிலை, அவரைக் கவிதை எழுதவும், சிறுகதைகள் எழுதவும் தூண்டுவதாக அமைகிறது.

அரபு, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தன்னுடைய படைப்புகளை கொடுத்த கலீல் ஜிப்ரான், நவீன அரபு இலக்கியத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் என்றால் அது மிகையாகாது. இவரது புத்தகங்களும், அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலும் விற்பனையில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்றன. கலீல் ஜிப்ரான் ஆங்கிலத்தில் எழுதிய ‘தீர்க்கதரிசி’ என்னும் கவிதைத் தொகுப்பு, உலகம் முழுவதும் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தது. அவர் வரைந்த 12 உளவியல், தத்துவங்கள் மிளிரும் ஓவியங்கள் அந்நூலில் இடம்பெற்றிருந்தன. அதேபோல், கலீலின் ‘தி மேட்மேன்’ என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பும், வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கலீல் ஜிப்ரான் உதிர்த்த பொன்மொழிகள், உலகம் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒன்றாக, இன்றுவரை காணப்படுகின்றன. “குழந்தைகள் உங்கள் மூலமாகப் பிறந்தவர்கள்; ஆனால், உங்கள் குழந்தைகள் இல்லை. எனவே அவர்களின் மீது எந்தவிதமான அதிகாரமும் செலுத்த முயற்சி செய்யாதீர்கள்” என்று பெற்றோர்களுக்கு அவர் கூறிய அறிவுரை, பல பெற்றோர்களின் அகக் கண்களைத் திறந்தது.

கலீல் ஜிப்ரான் தன்னை ஒரு தீர்க்கதரிசியாகவே பாவித்துக் கொண்டார், காதல், கல்யாணம், குழந்தைகள், சட்டம், நீதி, இன்பம், துன்பம், குடிப்பது, களித்திருப்பது, இறப்பது, இல்லாமல் போவது என, வாழ்வின் அனைத்து படிநிலைகளையும் தனது எழுத்துகளில் வடித்தார். கலைகளால் வசீகரிப்பட்டவராகவும், சிநேகிதர்களின் நேசத்திற்கு உரியவராகவும், தான உருவாக்கிக் கொண்ட உலகத்தில் வாழ்ந்து மறைந்த ஜிப்ரானின் நினைவு தினமான இன்று, அவரது இந்த பொன்மொழியே அனைவரும் அனுபவிக்க வேண்டிய தேவையுடையது.

“உண்மைக்கு மட்டுமே பணிந்து செல்லுங்கள், அழகை மட்டுமே பின்பற்றுங்கள், அன்பிற்கு மட்டுமே கீழ்படியுங்கள்”

Exit mobile version