உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தற்கொலை எண்ணம் தோன்றினால் அதலிருந்து எவ்வாறு விடுபடுவது? என்பது குறித்த விழிப்புணர்வு.
கூர்மையான வாளைவிட கடுமையான சொல் உயிரை பறிக்கும் திறன் வாய்ந்தது. அப்படி உணர்ச்சிகளின் சாராம்சங்களில் சிக்கிக் கொண்டு, தற்கொலை முடிவை தேர்ந்தெடுப்பவர்களை தடுக்கும் நோக்கில், செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக தற்கொலைத் தடுப்பு சங்கம் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. ”எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைப்போம் தற்கொலையை தடுப்போம்” என்பது இந்த ஆண்டிற்கான கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இன்றும் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றார். தமிழகத்தை பொருத்தவரை தற்கொலை விகிதம் 11 புள்ளி 8 சதவீதமாக உள்ளது. 15 முதல் 30 வயதிற்குள்ளானவர்களுக்கு பரவலாக ஏற்படும் மனச்சோர்வு, தேவையற்ற குழப்பம், சமூகத்தில் பிரச்சனைகளை கண்டு பயப்படுவது, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனப்பான்மையை இழந்தவர்களுக்கு தற்கொலை எண்ணமே முதலில் தோன்றுவதாக அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்கொலை உணர்வோடு யாரேனும் இருக்கும்போதோ அல்லது தங்களது உணர்வை வெளிப்படுத்தும்போதோ அவர்களை அலட்சியப்படுத்தாமல், மருத்துவர் உதவியுடன் அல்லது பரிந்துரையாளர்கள் மூலமாக உரிய சிகிச்சையளித்து அவர்களின் மனதை மாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
வாழ்வில் பிரச்சனைகள் இல்லாத மனிதரே இல்லை, அதை கல் போல் எண்ணி கண்களுக்கு அருகில் வைத்து பார்க்கும் போது அது உலகத்தையே மறைத்துவிடும், அதையே சற்று தள்ளிவைத்து பாருங்கள் அது என்ன என்பது நம் மனதிற்கு விளங்கும். அதை தூக்கி கால்களுக்கு கீழே எரிந்துவிடுங்கள் கஷ்டங்களையும் கவலைகளையும் மறந்து சிரிப்புடன் சிறப்பாக வாழ்வீர்கள்.