இன்று உலக தேங்காய் தினம்!!

இன்று உலக தேங்காய் தினம். தேங்காய்க்கு எல்லாம் தினமா? என்று கேள்வி எழுப்புவர்களுக்கு ஏராளமான ஆச்சர்யங்களை பதிலாக தருகிறது தேங்காய்.. அப்படி என்ன ஸ்பெஷல் இந்த தேங்காய் தினத்தில் என்பதை அறிந்து கொள்வோம் வாருங்கள்..

தெங்கு என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் அளவுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாய் தமிழர்களோடு இரண்டற கலந்து வரும் ஒரு பொருள் தான் தேங்காய். ஆனால் இதன் பிறப்பிடம் என்னவோ இந்தோனேஷியா என்று கூறுகின்றனர். பிறந்த வீட்டை விட, புகுந்த வீடான தமிழ்நாட்டில் தான் தேங்காய்க்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

தேங்காய் விளைச்சலில் தமிழகம் இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்குகிறது. தென்னை மரத்தின் உச்சி முதல் பாதம் வரை அனைத்துமே லாபம் தர கூடியவைதான். இளநீர் சூட்டை தணிக்கும் பானமாகவும், தேங்காய் சமையலில் சுவைகூட்டும் பொருளாகவும், கொப்பரை லாபம் தரும் ஒன்றாகவும் விளங்குகிறது.

1 ஏக்கர் பரப்பளவிற்கு 70 மரங்கள் நடவு செய்யப்படும் நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே பெரிய அளவில் வளர்ந்து அதிக பயனை அள்ளித்தரும் வரப்பிரசாதமே தென்னை. தமிழகத்தில் பொள்ளாச்சி, திண்டுக்கல் பகுதிகளில் தேங்காய் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேங்காய், எண்ணெய், தேங்காய் துருவல், தேங்காய் பால், மிட்டாய் போன்ற தயாரிப்பிற்கு பயன்படுகிறது. இதன் சிரட்டை மற்றும் தென்னை நார் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று உபயோக பொருட்கள் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. டீ கப் , அழகு சாதன பொருட்கள், கயிறு என பல்வேறு உபயோக பொருட்கள் இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறன.

அதிக அளவில் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டாலும், விவசாயிகளை விட கொள்முதல் செய்யும் நபர்களே அதிக லாபம் பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. இந்த தேங்காய் தினத்தில் விவசாயிகளின் வாழ்வில் இளநீர் போல் இனிமை கூடட்டும் என்று வாழ்த்துவோம்..

Exit mobile version