சர்வதேச சதுரங்க தினம் இன்று கொண்டாடப்படுகிறது.. அது குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்..
உடல் வலிமையை அதிகரிக்க உலகில் ஏராளமான விளையாட்டுகள் உள்ள நிலையில், அறிவாற்றல் வளர உதவும் விளையாட்டுகள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது சதுரங்க விளையாட்டு.
செஸ் எந்த நாட்டில் தோன்றியது என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. இருப்பினும், செஸ் விளையாட்டின் தாயகம் இந்தியாதான் என பல ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் 6ஆம் நூற்றாண்டில் இருந்து வந்த ”சதுரங்கா” என்ற விளையாட்டுதான், இன்றைய செஸ் போட்டியின் முன்னோடியாக கருதப்படுகிறது. பின்னர், அந்த விளையாட்டு உலகம் முழுவதும் பரவியது.
செஸ் விளையாடுவதால் அறிவாற்றல் அதிகரிக்கும் என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. குறிப்பாக, 1985ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகர பள்ளி ஒன்றில் இது தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், செஸ் விளையாடும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருந்தது தெரிய வந்தது. அதேபோன்று வெனிசுலாவில் நடத்தப்பட்ட ஆய்வு, செஸ் விளையாடும் மாணவர்களின் I.Q. திறன் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
எனவே, சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு செஸ் விளையாட கற்றுத்தருவது, அவர்களின் அறிவாற்றல் வளர பெரிதும் உதவும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சதுரங்க விளையாட்டில் கோலோச்சும் நாடாக விளங்கும் ரஷ்யா, அதன் பொருட்டே 4 வயதிலேயே தனது நாட்டு குழந்தைகளுக்கு செஸ் விளையாட்டை கற்றுக்கொடுக்கிறது.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், முதியவர்களும் செஸ் விளையாட்டு பல்வேறு பலன்களை தருகிறது. குறிப்பாக, செஸ் விளையாடும் முதியவர்களின் நினைவாற்றம் குறையாமல் இருப்பதாக, the new england journal of medicie நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
இத்தகைய செஸ் விளையாட்டின் சர்வதேச கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்த தினம் ஆண்டுதோறும் உலக சதுரங்க தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.