புதிய மாவட்டமாக தென்காசி இன்று உதயமாகுவதை அடுத்து, நகரம் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக பிரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு தென்காசி பகுதி மக்கள் மற்றும் மாணவ மாணவிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அதற்கான அரசாணையையும் வெளியிட்டு, தனி அதிகாரியையும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டத்திற்கான எல்லை வரையறை தீவிரமாக நடந்ததையடுத்து, இன்று மாவட்ட துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று மாவட்டத்தின் துவக்க விழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்களும் பங்கேற்கின்றனர். இதனால் தென்காசி முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.